தேர்தல் களத்தில் தைரியமாக சந்திக்க பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி அழைப்பு
தேர்தல் களத்தில் தைரியமாக சந்திக்க பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி அழைப்பு
ADDED : ஏப் 06, 2024 10:29 PM

புதுடில்லி:பணமோசடி வழக்குகளில் பா.ஜ., தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என அமலாக்கத் துறைக்கு டில்லி அமைச்சர் அதிஷி சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டில்லி அமைச்சர் அதிஷி சிங் கூறியதாவது:
பா.ஜ., உத்தரவுப்படிதான் தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இயங்குகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது.
அதேநேரத்தில், பணமோசடி வழக்குகளில் பா.ஜ., தலைவர்கள் மீது அமலாக்கத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அதை அறிக்கையாக வெளியிட அமலாக்கத் துறையால் முடியுமா?
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ., பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் பா.ஜ., மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அமலாக்கத் துறையிடம் கடந்த மாதமே மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அமலாக்கத் துறை அந்த மனுவை கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்க சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றைப் பயன்படுத்துவது போல, தேர்தல் ஆணையத்தையும் பா.ஜ., பயன்படுத்துகிறது. விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதை விட்டுவிட்டு, தேர்தலில் ஆம் ஆத்மியை தைரியமாக சந்திக்க பா.ஜ., முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வில் சேராவிட்டால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவீர்கள் என பா.ஜ., தன்னை மிரட்டியதாக அதிஷி சிங் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு ஆதாரத்துடன் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அதிஷிக்கு நேற்று முன் தினம் 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது.

