ADDED : மே 04, 2024 09:03 PM
புதுடில்லி:கிழக்கு டில்லி, புதுடில்லி மற்றும் மேற்கு டில்லி லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தலைநகர் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி, மூன்று தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகின்றன.
ஆம் ஆத்மி தெற்கு டில்லி வேட்பாளரான சஹிராம் பெஹல்வன் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
கிழக்கு டில்லி குல்தீப் குமார், புதுடில்லி சோம்நாத் பாரதி மற்றும் மேற்கு டில்லி வேட்பாளர் மஹபால் மிஸ்ரா ஆகிய மூவரும் தங்கள் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தனர். மூன்று வேட்பாளர்களும் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங்.
அமைச்சர்கள் அதிஷி, கைலாஷ் கெலாட், எம்.எல்.ஏ., திலீப் பாண்டே, காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கிழக்கு டில்லியில் போட்டியிடும் குல்தீப் குமார் வேட்பு மனு தாக்கல் செய்வதற்குக் முன், அவரது பெற்றோர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் மனைவி சீமாவிடம் ஆசி பெற்றார்.
வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. வரும் 25-ம் தேதி ஓட்டுப்பதிவும், ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.