ரூ.7.08 கோடி வெளிநாட்டு நன்கொடை முறைகேடாக திரட்டியது ஆம் ஆத்மி
ரூ.7.08 கோடி வெளிநாட்டு நன்கொடை முறைகேடாக திரட்டியது ஆம் ஆத்மி
ADDED : மே 21, 2024 01:15 AM
புதுடில்லி, ஆம் ஆத்மி, கடந்த 2014 முதல் 2022ம் ஆண்டு வரை வெளிநாட்டு நன்கொடையாக 7.08 கோடி ரூபாயை முறைகேடாக திரட்டியுள்ளது எனவும், இது, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறும் செயல் என்றும், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி, வெளிநாட்டில் இருந்து பெற்ற நிதி விபரங்கள், பல்வேறு சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது.
அதன் விபரம்:
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல நன்கொடையாளர்களிடமிருந்து ஆம் ஆத்மி நிதி பெற்றுள்ளது.
அவர்களின் அடையாளங்கள் உட்பட, வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்பான பல உண்மைகளை மறைத்து உள்ளது. அக்கட்சி 2014 முதல் 2022 வரை 7.08 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி திரட்டிஉள்ளது.
குறிப்பாக, பல நன்கொடையாளர்கள் ஒரே பாஸ்போர்ட் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்களின் விபரங்களை அளித்து, ஆம் ஆத்மிக்கு நன்கொடை அளித்துள்ளதையும் கண்டறிந்துள்ளோம்.
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை ஆம் ஆத்மி மீறியுள்ளது.
கனடாவில் 2016ல் திரட்டிய நிதியை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-., துர்கேஷ் பதக் உட்பட சிலர் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மியை சேர்ந்த டில்லி அமைச்சர் ஆதிஷி கூறுகையில், “இது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை அல்ல; பா.ஜ.,வின் நடவடிக்கை தான்.
''ஆம் ஆத்மியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பா.ஜ., பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. லோக்சபா தேர்தல் முடியும் வரை இதுபோன்ற செயல்பாடுகளில் அக்கட்சி ஈடுபடும்,” என்றார்.

