ADDED : ஆக 16, 2024 10:59 PM
விக்ரம் நகர்:கோல்கட்டாவில் கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாகவும், குற்றவாளிக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி கோரியுள்ளது.
கோல்கட்டாவில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோல்கட்டாவில் நடந்த சம்பவம் மிகவும் வேதனையானது மற்றும் வருந்தத்தக்கது. இதை நினைத்தாலே உள்ளம் நடுங்குகிறது, அந்த ஜூனியர் டாக்டர் பெண் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்? இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும். முன்னுதாரணமாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழும்போது, அரசியல் துவங்குகிறது, குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆர்.ஜி., கார் மருத்துவக் கல்லுாரியில் எழுந்த பிரச்னை ஒட்டு மொத்த நாட்டிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதுபோன்ற வழக்குகளில் அரசியல் செய்து, பதிலுக்குப் பதில் குற்றச்சாட்டுகளை கூறுவதால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

