தாய் - குழந்தை உயிரிழப்பு பா.ஜ., மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்
தாய் - குழந்தை உயிரிழப்பு பா.ஜ., மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்
ADDED : ஆக 03, 2024 12:54 AM
புதுடில்லி:“கிழக்கு டில்லியில் மழைநீர் தேங்கியிருந்த வாய்க்காலில் விழுந்து பெண் மற்றும் அவரது மூன்று வயது குழந்தை இறந்த சம்பவத்தில் பா.ஜ., மவுனமாக இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தைத் தான் பா.ஜ., விரும்புகிறது; ஆனால், மக்கள் நலனைப் பற்றி அந்தக் கட்சி சிந்திக்கவில்லை,”என, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறினார்.
இதுகுறித்து ராய் கூறியதாவது:
கிடக்கு டில்லி காஜிபூரில் மழைநீர் தேங்கியிருந்த வாய்க்காலில் தவறி விழுந்து பெண் மற்றும் அவரது மூன்று வயது குழந்தை உயிரிழந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற பா.ஜ., செய்தித் தொடர்பாளர் இது பொதுப்பணித் துறை கட்டுப்பட்டில் உள்ள வடிகால் என்றார். ஆனால், அந்த வடிகாலை டில்லி மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது என்பதை அறிந்தவுடன் பா.ஜ., தலைவர்கள் மவுனம் காக்கின்றனர். பா.ஜ., இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கவர்னர் சக்சேனா தலைவராக இருக்கும் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் கால்வாயில் விபத்து என்பதை அறிந்தவுடன் மவுனமாகி விட்டது. தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆணையத்தின் தலைவரும் கவர்னருமான சக்சேனா பொறுப்பேற்கவில்லையா?
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வும், டில்லி மேம்பாட்டு ஆணைய உறுப்பினருமான திலீப் பாண்டே, துணை நிலை கவர்னர் சக்சேனாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று துணைநிலை கவர்னர் சக்சேனா பதவி விலக வேண்டும். மேலும் இந்த விபத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும்,”என்றார்.
காஜிபூர் கோடா காலனி அருகே 31ம் தேதி இரவு 8:00 மணிக்கு மூன்று வயது குழந்தையுடம் நடந்து வந்த தனுஜா கால்தவறி வாய்க்காலில் விழுந்தார்.
மழைநீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.