24 மணி நேரத்துக்குள் கெஜ்ரிவால் விடுதலை: ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியா புது 'ஐடியா'
24 மணி நேரத்துக்குள் கெஜ்ரிவால் விடுதலை: ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியா புது 'ஐடியா'
ADDED : ஆக 11, 2024 12:45 AM

புதுடில்லி: ''சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால், அரவிந்த் கெஜ்ரிவால் 24 மணி நேரத்துக்குள் சிறையில் இருந்து வெளியே வருவார்,'' என, ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
கைது
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 2023 பிப்., 26ல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்; தொடர்ந்து, அமலாக்கத் துறையாலும் கைது செய்யப்பட்டார்.இரு வழக்கிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டதையடுத்து, 17 மாத சிறைவாசத்துக்கு பின், திஹார் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று, டில்லியின் கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று, மணீஷ் சிசோடியா வழிபாடு செய்தார். தொடர்ந்து, மஹாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார்.
அவருடன், ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், டில்லி அமைச்சர் ஆதிஷி உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதன் பின், ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடையே மணீஷ் சிசோடியா பேசியதாவது:
சர்வாதிகாரத்துக்கு எதிராக முழு பலத்துடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தால், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 24 மணி நேரத்திற்குள் சிறையில் இருந்து வெளியே வருவார்.
போராட்டம்
அரசியல் சாசனத்தை விட, பா.ஜ., தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. தலைவர்களை சிறையில் அடைக்கும் மற்றும் குடிமக்களை துன்புறுத்தும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒவ்வொரு நபரும் போராட வேண்டும்.
ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வை படுதோல்வி அடைய வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.