ADDED : டிச 14, 2024 01:53 AM
புதுடில்லி:உத்தம் நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நரேஷ் பல்யானை சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது..
தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நரேஷ் பல்யான், கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு வழக்கில் கடந்த 4ம் தேதி நரேஷ் பல்யான் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீஸ் காவலில் விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. காவல் முடிந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, டில்லி மாநகரப் போலீஸ் சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் அகந்த் பிரதாப் சிங், “இந்த வழக்கில் பெரிய சதியை வெளிக்கொணர, பல்யானிடம் மேலும் 10 நாட்கள் போலீசார் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்,”என, மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நிராகரித்த நீதிபதி காவேரி பவேஜா, எம்.எல்.ஏ., நரேஷ் பல்யானை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

