சட்டசபை வளாகத்துக்குள் செல்ல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை?
சட்டசபை வளாகத்துக்குள் செல்ல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை?
ADDED : பிப் 27, 2025 10:23 PM

விக்ரம்நகர்:இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை வளாகத்துக்குள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எட்டாவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபையின் முதல் நாளில் இருந்தே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னை செய்து வருகின்றனர்.
முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டதாகக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். துணைநிலை கவர்னர் உரையாற்ற விடாமல் கோஷங்கள் எழுப்பி இடையூறு செய்தனர்.
இதனால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத வகையில் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர். அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் படங்கள் அகற்றப்படவில்லையென, முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்தது.
இதை ஏற்க மறுத்துள்ள ஆம் ஆத்மி, இருவரின் படங்களும் முந்தைய இடத்திலேயே இருக்க வேண்டுமென அடம்பிடித்து, அதுவரை போராட்டம் தொடருமென அறிவித்தது.
நேற்று இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கம் போல் சட்டசபைக்கு வந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே நுழைவு வாயிலில் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது, “டில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ., சர்வாதிகாரத்தின் அனைத்து வரம்புகளையும் தாண்டி வருகிறது,” என, முன்னாள் முதல்வர் ஆதிஷி குற்றஞ்சாட்டினார்.
அம்பேத்கர் படங்களுடன், ஜெய் பீம் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியபடி, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குல்தீப் குமார் கூறுகையில், “நாங்கள் சட்டசபையில் ஜெய்பீம் என்ற கோஷங்களை எழுப்பினோம். அதற்காக, நாங்கள் மூன்று நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டோம். இன்று, நாங்கள் சபைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இது தவறு. எதிர்க்கட்சியின் குரலை அவர்கள் எப்படித் தடுக்க முடியும்? முழு எதிர்க்கட்சியும் பங்கேற்பதை அவர்கள் எப்படித் தடுக்க முடியும்?” என்றார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சஞ்சீவ் ஜா கூறுகையில், “சபாநாயகரின் உத்தரவு விசித்திரமானது. நாங்கள்தான் அவரது நியமனத்தை ஆதரித்தோம். இப்போது அவர் எங்களை வெளியேற்றிவிட்டார். சபாநாயகரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் அவர் எங்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இந்த பா.ஜ., அரசு, அம்பேத்கரின் சித்தாந்தத்தை வெறுக்கிறது,” என்றார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமனத்துல்லா கான் கூறுகையில், “பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சபையில் மேஜைகள் மீது ஏறியபோதும், அவர்களை ஒருபோதும் இப்படித் தடுக்கவில்லை. இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை,” என்றார்.
அன்று சட்டசபையில் இல்லாததால் கான் இடைநீக்கம் செய்யப்படாத ஒரே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஆவார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நாளில், மதுபானக் கொள்கை குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையை பா.ஜ., அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது. இது ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.,வுக்கும் இடையிலான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.