கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மியினர் உண்ணாவிரத போராட்டம்
கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மியினர் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஏப் 08, 2024 04:36 AM

புதுடில்லி: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து, நாடு முழுதும் அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மாதம் 21ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நாடு முழுதும் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி நேற்று அழைப்பு விடுத்தது.
இதன்படி டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அமைச்சர்கள் கோபால் ராய், ஆதிஷி, இம்ரான் ஹூசைன், டில்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “இந்த உண்ணாவிரத போராட்டம் நீதிக்காக நடைபெறுகிறது. அமலாக்கத்துறை தொடுத்துள்ள இவ்வழக்கின் வாயிலாக ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சதித்திட்டம் தீட்டிஉள்ளது,” என்றார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கத்கர் காலனில் நடந்த இப்போராட்டத்தில், மாநில அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இது தவிர, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து மஹாராஷ்டிரா, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், வட அமெரிக்க நாடான கனடாவின் டொரண்டோ, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன், அமெரிக்காவின் பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள இந்திய துாதரகத்திற்கு முன்பும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதற்கிடையே, ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு பதிலடி தரும் வகையில், முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகக்கோரி, டில்லி பா.ஜ.,வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

