கவர்னர் ராஜினாமா செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
கவர்னர் ராஜினாமா செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 03, 2024 09:03 PM

புதுடில்லி,:மழைநீர் வடிகால்வாயில் மூன்று வயது மகனுடன் விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, டில்லி மேம்பாட்டு ஆணைய தலைவரும், துணைநிலை கவர்னருமான சக்சேனா, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கோரி, ஆம் ஆத்மி கட்சியினர் கவர்னர் மாளிகை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிழக்கு டில்லி காஜிபூ கோடா காலனியில் வசித்த தனுஜா,22, அவரது மகன் பிரியான்ஷு,3, மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்தக் கால்வாயை டில்லி மேம்பாட்டு ஆணையம் பராமரிப்பதாக டில்லி மாநகராட்சியும், சம்பவம் நடந்த கால்வாயின் பகுதியை மாநகராட்சிதான் பராமரிக்கிறது என ஆணையமும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தாயும் மகனும் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, ஆணைய தலைவரும், துணைநிலை கவர்னருமான சக்சேனா தன் பதவியை ராஜினாமா செய்யக்கோரி, கவர்னர் மாளிகை அருகே ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குல்தீப் குமார் பேசும்போது, இரு உயிர்களைப் பலி வாங்கி இந்த வடிகால்வாய் துணைநிலை கவர்னர் சக்சேனா தலைமையிலான டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் பராமரிப்பில் உள்ளது. இது ஒரு விபத்து அல்ல. ஆணைய அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த கொலை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று கவர்னர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், பலியான பெண் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்”என்றார்.
கோஷமிட்டவாறு கவர்னர் மாளிகை நோக்கி வந்த ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
iஇந்த சம்பவம் குறித்து கவர்னர் மாளிகை ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிக்கையில், 'சம்பவம் நடந்த வடிகாலின் மொத்த நீளம் 1,350 மீட்டர். அதில் 1,000 மீட்டர் தூரத்தை டில்லி மாநகராட்சி பராமரிக்கிறது. மீதமுள்ள 350 மீட்டைத்தான் டில்லி மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது' என கூறியுள்ளது.
ஆனால், விபத்து நடந்த இடத்தை ஆணையம்தான் பராமரிக்கிறது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.