UPDATED : ஏப் 18, 2024 02:31 AM
ADDED : ஏப் 18, 2024 02:30 AM

புதுடில்லி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசுப் பணிகளை முன்னிலைப்படுத்த ராம நவமியான நேற்று 'உங்களின் ராம ராஜ்ஜியம்' என்ற இணையதளத்தை, ஆம் ஆத்மி துவக்கியது.
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே, அவர் முதல்வர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ராமநவமியான நேற்று ஆம் ஆத்மி சார்பில் புதிய இணையதளம் துவங்கப்பட்டது. 'ஆப் கா ராம ராஜ்ஜியம்' அதாவது, 'உங்களின் ராம ராஜ்ஜியம்' என்ற பெயரிலான இணையதளத்தை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், ஆதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் டில்லியில் நேற்று துவக்கி வைத்தனர்.
இது குறித்து சஞ்சய் சிங் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் டில்லியில் நாங்கள் மூன்று முறை அரசை அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி பஞ்சாபிலும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளோம். கெஜ்ரிவால் தலைமையில் டில்லியிலும், பகவந்த் மான் தலைமையில் பஞ்சாபிலும் பல்வேறு நலத் திட்டங்களை ஆம் ஆத்மி நிறைவேற்றி வருகிறது.
நாங்கள் செய்த பணிகளை மக்களுக்கு தெரிவிக்கவும், ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்ற எங்கள் கனவின் உறுதியை வெளிப்படுத்தவும் இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
ராம சரித மானஸ் காப்பியம் தந்த உந்துதல் காரணமாகவே டில்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி அரசு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாடுபட்டு வருவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ராம ராஜ்ஜியம் குறித்த நிறைவை மக்கள் பெற ராமர் கடுமையான சவால்களை எதிர்கொண்டார்; 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். ஆனாலும், அவர் தன் வாக்குறுதிகளை மீறவில்லை. கெஜ்ரிவாலும் அதே போல் கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏழு லோக்சபா தொகுதிகள் அடங்கிய டில்லிக்கு அடுத்த மாதம் 25ம் தேதியும், 13 தொகுதிகள் உடைய பஞ்சாபிற்கு ஜூன் 1ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.

