சிவகுமாருக்கு முதல்வர் பதவி சித்துவுக்கு மடாதிபதி அறிவுரை
சிவகுமாருக்கு முதல்வர் பதவி சித்துவுக்கு மடாதிபதி அறிவுரை
ADDED : ஜூன் 27, 2024 11:03 PM

பெங்களூரு: 'சித்தராமையா முதல்வர் பதவியை, சிவகுமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்' என மேடையிலேயே சந்திரசேகர சுவாமிகள் வலியுறுத்தியதால், சித்தராமையா தர்ம சங்கடத்துக்கு ஆளானார்.
பெங்களூரின், கன்டீரவா ஸ்டேடியத்தில் கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் பங்கேற்றனர்.
அவர்கள் முன்னிலையிலேயே விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின், சந்திரசேகர ஸ்ரீ சுவாமிகள் பேசியதாவது:
உங்களுக்கு (சித்தராமையா), முதல்வராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. இனி சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டு தாருங்கள். சித்தராமையா மனம் வைத்தால் மட்டுமே, சிவகுமார் முதல்வராக வாய்ப்பு கிடைக்கும்.
கட்சிக்காக அவர் போராட்டம் நடத்தி உள்ளார். சித்தராமையா எதையும் செய்யாமல், பதவிக்கு வந்துள்ளார். சிவகுமார் அதிகமான பணத்தையும் செலவிட்டுள்ளார். இவர் முதல்வராவது தான் தர்மம். இவருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவருக்கு பதிலளித்த சித்தராமையா, ''அனைத்தையும் கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலிடத்தின் முடிவுப்படி, நாங்கள் நடந்து கொள்வோம்,'' என்றார்.
மேடையில் அனைவரின் முன்னிலையில், முதல்வர் பதவியை விட்டுத்தரும்படி சந்திரசேகர சுவாமிகள் கூறியதால், சித்தராமையா தர்ம சங்கடத்துக்கு ஆளானார். சுவாமிகளின் வலியுறுத்தல் குறித்து ஊடகத்தினர் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் சிவகுமார், எந்த பதிலையும் கூறாமல் அங்கிருந்து சென்றார்.

