ADDED : ஜூலை 06, 2024 06:00 AM

ராய்ச்சூர்: விஜய மஹாந்தேஸ்வரா மடத்தில், மர்ம கும்பல் புகுந்து மடாதிபதியை மிரட்டி கொள்ளை அடித்தது.
ராய்ச்சூர், லிங்கசகூரில் விஜய மஹாந்தேஸ்வரா கிளை மடம் உள்ளது. இங்கு மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு உறக்கத்தில் இருந்தார்.
அப்போது மடத்துக்கு வந்த சிலர், 'நாங்கள் கலபுரகியில் இருந்து வருகிறோம். மடத்தின் பக்தர்கள். இரவு தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்றனர்.
இதை நம்பிய சித்தலிங்க சுவாமிகள், அவர்களை உள்ளே அனுமதித்தார். உள்ளே வந்த நபர்கள், துப்பாக்கி காண்பித்து மிரட்டினர். 20 லட்சம் ரூபாய் ரொக்கம், 80 கிராம் தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள் உட்பட, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, கொள்ளை அடித்து கொண்டு தப்பியோடினர். இது குறித்து, லிங்கசகூரு போலீஸ் நிலையத்தில், மடாதிபதி புகார் அளித்தார்.
போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர். கூடுதல் எஸ்.பி., சிவகுமார், மடத்துக்கு வந்து பார்வையிட்டார்.