முட்டை வழங்க மடாதிபதிகள் எதிர்ப்பு; ஆன்மிக உணர்வு பாதிக்கும் என கருத்து
முட்டை வழங்க மடாதிபதிகள் எதிர்ப்பு; ஆன்மிக உணர்வு பாதிக்கும் என கருத்து
ADDED : செப் 14, 2024 11:28 PM

பெங்களூரு : பள்ளி மாணவர்களுக்கு, வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மடங்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டாம் என, மடாதிபதிகள் வலியுறுத்துகின்றனர்.
சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு கடலைமிட்டாய், வாழைப்பழம் வழங்கப்படும்.
இதற்கிடையில் மடங்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, முட்டை வழங்க வேண்டாம் என, மடாதிபதிகள் வலியுறுத்துகின்றனர். காசி மடத்தின் சந்திரசேகர சிவாச்சார்ய சுவாமிகள், ஸ்ரீசைலம் மடத்தின் சென்னசித்தராம பண்டிதாராத்யா சுவாமிகள் உட்பட லிங்காயத் மடாதிபதிகள், 'மடங்கள் சார்பில் நடக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, முட்டை வழங்க வேண்டாம்' என்கின்றனர்.
பெரும்பாலான மடங்கள் சார்பில் நடக்கும் கல்வி நிறுவனங்கள், அந்தந்த மடங்களின் வளாகத்தில் செயல்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, முட்டை வழங்குவது, ஆன்மிக நெறிமுறைகளுக்கு எதிரானது. இத்தகைய முடிவு எடுக்கு முன்பு, ஆன்மிக உணர்வு பாதிக்கப்படாத வகையில், கல்வித்துறை உத்தரவு வெளியிட வேண்டும்.
முட்டைக்கு பதிலாக கடலை மிட்டாய், வாழைப்பழம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்துகின்றனர்.