காஷ்மீர் தேர்தலில் காங்.,குடன் கூட்டணி அறிவித்தார் அப்துல்லா அறிவித்தார் அப்துல்லா
காஷ்மீர் தேர்தலில் காங்.,குடன் கூட்டணி அறிவித்தார் அப்துல்லா அறிவித்தார் அப்துல்லா
ADDED : ஆக 23, 2024 12:59 AM
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி இருப்பதாகவும், தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 2019க்கு பின், முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்க உள்ளது. 90 தொகுதிகள் உடைய ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு செப்., 18, 25 மற்றும் அக்., 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 4ல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் பங்கேற்றனர்.
சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு சுமுகமாக நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகாமியும் கூட்டணி பேச்சில் பங்கேற்றார். இரு கட்சிகளுடனும் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். காங்கிரசின் முன்னுரிமையும் அதுவே. மெகபூபா முப்தியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கின்றனர். யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.