ராஜ்பவனை தவறாக பயன்படுத்துவதா? கவர்னர் மீது ஹரிபிரசாத் பாய்ச்சல்!
ராஜ்பவனை தவறாக பயன்படுத்துவதா? கவர்னர் மீது ஹரிபிரசாத் பாய்ச்சல்!
ADDED : ஆக 20, 2024 11:37 PM

மங்களூரு : ''ராஜ்பவனை, கவர்னர் தவறாக பயன்படுத்துகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை விட்டு விலகி, பா.ஜ.,வின் வழிகாட்டுதலின்படி அவர் செயல்பட முடியாது,'' என காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் தெரிவித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தன் மீது வழக்கு பதிவு செய்ய, கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா மனு தாக்கல் செய்தது, பா.ஜ.,வினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தயிரில் கல்லை தேடுவதே பா.ஜ.,வினர் வேலை.
ராஜ்பவனை, கவர்னர் தவறாக பயன்படுத்துகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை விட்டு விலகி, பா.ஜ.,வின் வழிகாட்டுதலின்படி செயல்பட முடியாது. கட்சி தலைவர் போன்று கவர்னர் செயல்படுகிறார்.
முன்பு, பா.ஜ.,வினர், 'ஆப்ரேஷன் தாமரை' மூலம் ஆட்சியை கவிழ்த்தனர். இப்போது வேறு வழியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். தற்போது கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவால், முதல்வர் நிம்மதி அடைந்துள்ளார். ஆனாலும், சட்ட போராட்டம் தொடரும். எடியூரப்பா, காசோலை மூலம் 20 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
கவர்னர் தாவர்சந்த் கெலாட், முன்னாள் தலித் அரசியல்வாதி. அவரை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
தலித்கள் மீது பா.ஜ.,வுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று ஏன் நினைக்கின்றனர்.
போராட்டத்தின் போது ஐவான் டிசோசா என்ன கூறினார் என்று தெரியவில்லை. இந்தியாவை வங்கதேசத்துடன் இணைத்து பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

