போலீஸ் காவலில் இறந்த வாலிபர் மாரடைப்பு என அறிக்கையில் தகவல்
போலீஸ் காவலில் இறந்த வாலிபர் மாரடைப்பு என அறிக்கையில் தகவல்
ADDED : மே 30, 2024 06:40 AM

தாவணகெரே: சென்னகிரி போலீஸ் நிலையத்தில், போலீசார் காவலில் வாலிபர் இறந்த வழக்கில், மாரடைப்பு காரணம் என்று, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்து உள்ளது.
தாவணகெரேயின் சென்னகிரி திப்புநகரில் வசித்தவர் ஆதில், 32. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, 24ம் தேதி ஆதிலை, சென்னகிரி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் நிலையத்திற்குள் சென்ற சில நிமிடத்தில், ஆதில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
போலீசார் தாக்கியதில் ஆதில் இறந்ததாக கூறி, 24ம் தேதி இரவு, சென்னகிரி போலீஸ் நிலையம் மீது, ஆதில் உறவினர்கள் கல்வீசி தாக்கினர். இரண்டு ஜீப்புகளை கவிழ்த்து சேதப்படுத்தினர். கல்வீச்சில் 11 போலீசார் காயம் அடைந்தனர். ஆதிலின் பிரேத பரிசோதனை, தாவணகெரே மாவட்ட முதன்மை நீதிபதி ராஜேஸ்வரி ஹெக்டே முன்னிலையில் நடந்தது.
போலீஸ் நிலையம் மீது கல்வீசிய வழக்கில், ஆதிலின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் கைதாகினர். ஆதில் இறந்த வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், குறைந்த ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு ஏற்பட்டு ஆதில் இறந்ததாக கூறப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையை சி.ஐ.டி.,க்கு, தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாத் அனுப்பி வைத்தார்.