இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட தங்க கடத்தல் வழக்கின் குற்றவாளி
இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட தங்க கடத்தல் வழக்கின் குற்றவாளி
ADDED : செப் 11, 2024 01:47 AM

புதுடில்லி, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து, ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு 2020ல் கடத்தி வரப்பட்ட, 9 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18.56 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கிறது. இந்த தங்கக் கடத்தல் வழக்கில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் குற்றவாளிகள் இருப்பதை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியுடன், ஷோகத் அலி, மொஹபத் அலி ஆகியோரை, சவுதி அரேபியாவில் இருந்து நம் நாட்டுக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
இந்த தங்கக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட முனியத் அலி கான், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு எதிராக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கும்படி, இன்டர்போல் அமைப்புக்கு சி.பி.ஐ., கோரிக்கை விடுத்தது.
இதன்படி, 2021 செப்., 13ல், ரெட் கார்னர் எனப்படும் தேடப்படும் குற்றவாளி என்பதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில், முனியத் அலி கானை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்து வைத்து, நம் நாட்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி, அங்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சென்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, ஜெய்ப்பூருக்கு, முனியத் அலி கானை அதிகாரிகள் நேற்று அழைத்து வந்தனர்.
விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.