இல்லத்தரசி துாக்கிட்டு தற்கொலை கணவர் மீது கொலை குற்றச்சாட்டு
இல்லத்தரசி துாக்கிட்டு தற்கொலை கணவர் மீது கொலை குற்றச்சாட்டு
ADDED : மார் 28, 2024 05:15 AM

ஹாசன், : இல்லத்தரசி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை துாக்கில் தொங்கவிட்டதாக, கணவர் மீது கொலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹாசன் அருகே உத்துார்கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில், 30. இவரது மனைவி சுபா, 26. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக, வரதட்சணையாக பணம், நகை வாங்கி வரும்படி, சுபாவிடம், சுனில் கூறி உள்ளார்.
கூடுதல் வரதட்சணை வாங்கி வர சுபா மறுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையில் அடிக்கடி, தகராறு ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு தாயுடன் மொபைல் போனில் பேசிவிட்டு, சுபா துாங்க சென்று உள்ளார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சுபாவின் பெற்றோரிடம் மொபைல் போனில் பேசிய சுனில், “உங்கள் மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,” என கூறினார்.
அதிர்ச்சி அடைந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வந்தனர். சுனிலிடம் போலீசார் விசாரித்தபோது, குடும்ப தகராறில் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறினார். ஆனால் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால், சுபாவை கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை துாக்கில் தொங்கவிட்டதாக, சுபாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விசாரணை நடக்கிறது.