எத்னால் மீது நடவடிக்கை? அரவிந்த் பெல்லத் விளக்கம்!
எத்னால் மீது நடவடிக்கை? அரவிந்த் பெல்லத் விளக்கம்!
ADDED : ஆக 13, 2024 08:43 PM

தார்வாட்: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது, எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது,'' என, சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத் கூறி உள்ளார்.
தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். இதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்களுக்கும் சில கருத்துகள் இருக்கலாம். இது குறித்து எங்கள் கட்சிக்குள் விவாதிப்போம்.
பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சி பிரச்னை உள்ளது.
'மூடா' முறைகேட்டில் ஒரு கட்ட போராட்டம் முடிந்து விட்டது. அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம். முதல்வர் மீது விசாரணைக்கு கவர்னர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
தார்வாட் அஞ்சுமன் அமைப்பின் தலைவர் இஸ்மாயிலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தி சுற்றி திரிபவர்கள், இஸ்மாயில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
