வீட்டு உணவு கேட்ட நடிகர் தர்ஷன்; விசாரணை செப்., 5க்கு ஒத்திவைப்பு
வீட்டு உணவு கேட்ட நடிகர் தர்ஷன்; விசாரணை செப்., 5க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 20, 2024 11:26 PM
பெங்களூரு : வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்கும்படி, நடிகர் தர்ஷன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறை உணவு சாப்பிடுவதால் தர்ஷனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. உணவே விஷமாக மாறுகிறது.
இதனால் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தர்ஷன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதி நாக பிரசன்னா விசாரிக்கிறார்.
மருத்துவ குழு
நேற்று மனு மீது விசாரணை நடந்தது. அரசு தரப்பில், ஆஜரான வக்கீல் பிரசன்ன குமார் வாதாடியதாவது:
சிறை உணவு சாப்பிடுவதால் மனுதாரருக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என, சிறை மருத்துவக் குழு கூறி உள்ளது.
மனுதாரருக்கு வீட்டு உணவு வழங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என, சிறைத்துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தியும் கூறி உள்ளார். மனுதாரருக்கு வழங்கப்படும் உணவு தான், சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
தர்ஷன் சார்பில் ஆஜரான வக்கீல் பிரபுலிங்க நவடகி வாதாடுகையில், ''என் மனுதாரருக்கு வீட்டு உணவு வழங்குவதற்கான அனுமதியை வேண்டுமென்றே சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
''இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். மருத்துவ அதிகாரியின் அறிக்கையை பார்த்து, எங்கள் வாதத்தை முன்வைக்க அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார்.
இதை ஏற்று நீதிபதி நாகபிரசன்னா, விசாரணையை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பவித்ரா மனு
ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின், கைதான 17 பேரும் ஜாமின் கேட்டு மனு செய்யலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஜாமின் கேட்டு பவித்ரா சார்பில் அவரது வக்கீல் நேற்று முன்தினம் மனு செய்தார். அந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

