மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: நடிகர் தர்ஷன் கும்பல் கொடூரம்
மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: நடிகர் தர்ஷன் கும்பல் கொடூரம்
UPDATED : ஜூன் 17, 2024 05:22 AM
ADDED : ஜூன் 16, 2024 11:57 PM

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்ட ரசிகர் ரேணுகாசாமியின் உடலில், 34 இடங்களில் காயம் இருப்பதாகவும், அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன், 47. இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா, 34. இவருக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பினார்.
இதனால், கோபமடைந்த தர்ஷனும், பவித்ராவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை பெங்களூருக்கு கடத்தி வந்து சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார், தர்ஷன், பவித்ரா உட்பட 18 பேரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சிரித்த முகம்
கடந்த 15ம் தேதி இரவு தர்ஷனை அழைத்துக் கொண்டு, ஆர்.ஆர்., நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். கொலை செய்த போது தர்ஷன் அணிந்திருந்த உடைகள், ஷூ, வீட்டுக்கு வந்ததும் அவர் குளித்த தண்ணீர் பக்கெட், சோப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை தடய ஆய்வு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பவித்ராவை ஆர்.ஆர்., நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று போலீசார் அழைத்து சென்றனர். அவரது படுக்கையறையில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. தலையணை, பெட்ஷீட் மற்றும் ரேணுகாசாமியை கொலை செய்தபோது பவித்ரா அணிந்திருந்த உடைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவித்ராவை போலீசார் அழைத்து வந்திருப்பது பற்றி அறிந்ததும், அப்பகுதி மக்கள் வீட்டின் முன் கூடினர்; பக்கத்து வீட்டு மாடிகளில் ஏறி நின்றும் பார்த்தனர். சோதனை முடிந்து வெளியே வந்தபோது எந்தவித கவலையும் இன்றி, சிரித்த முகத்துடன் பவித்ரா இருந்தார்.
கார் பறிமுதல்
மேலும், இந்த கொலையில் கைதான சித்ரதுர்காவை சேர்ந்த ராகவேந்திரா, ஜெகதீஷ், அனு குமார், ரவி ஆகியோரை, சித்ரதுர்கா அழைத்து சென்றும் போலீசார் விசாரித்தனர். ரேணுகாசாமியை காரில் கடத்திய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. ரேணுகாசாமியை கடத்தி வந்த காரும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதாகி உள்ள நந்திஸ் என்பவரிடம் விசாரித்த போது, பவித்ராவுக்கு தன் மர்ம உறுப்பு படத்தை ரேணுகாசாமி அனுப்பியதால், அவரது மர்ம உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்ததும் தெரிந்தது.
கழுத்து எலும்பு முறிவு
இந்நிலையில், கொலையான ரேணுகாசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில், 'ரேணுகாசாமியின் உடலில் 34 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பெல்ட், இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் அவரது கழுத்து எலும்பு முறிந்துள்ளது.
'தாக்குதலில், மர்ம உறுப்பிற்கு செல்லும் எலும்பும் முறிந்துள்ளது. மர்ம உறுப்பு உட்பட உடலில் ஐந்து இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
இதன்வாயிலாக, ரேணுகாசாமியை துடிக்க துடிக்க சித்ரவதை செய்து, தர்ஷன் கும்பல் கொலை செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.