சென்னபட்டணாவில் நடிகர் தர்ஷன்? காங்., திட்டம் குறித்து 'திடுக்' தகவல்!
சென்னபட்டணாவில் நடிகர் தர்ஷன்? காங்., திட்டம் குறித்து 'திடுக்' தகவல்!
ADDED : ஜூன் 15, 2024 04:26 AM

பெங்களூரு: சென்னபட்டணா சட்டசபை இடைத்தேர்தலில் நடிகர் தர்ஷனை களமிறக்க காங்., திட்டமிட்டிருந்ததாக, பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் கூறினார்.
ராம்நகர் மாவட்டம், சென்னபட்டணா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார். இவரால் காலியான சென்னபட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
பா.ஜ.,வில் யார்?
இந்த தொகுதியில், பா.ஜ.,வில் யோகேஸ்வர், 'சீட்' எதிர்பார்க்கிறார். காங்கிரசில், பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில் தோல்வியடைந்த, முன்னாள் எம்.பி., சுரேஷ் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'இடைத்தேர்தலில், நான் போட்டியிட மாட்டேன். காங்கிரஸ் சார்பில் ஆச்சரியதக்க வேட்பாளர் களமிறங்குவார்' என, சுரேஷ் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமான நடிகர் தர்ஷன், பல்வேறு தேர்தல்களில் கட்சிக்காக பணியாற்றினார்.
எனவே, இவரை சென்னபட்டணா இடைத்தேர்தலில் களமிறக்க, துணை முதல்வர் சிவகுமாரும், சுரேஷும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சென்னபட்டணாவில் நேற்று யோகேஸ்வர் அளித்த பேட்டி:
சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஆச்சர்யத்துக்குரிய வேட்பாளரை களமிறக்குவதாக, சுரேஷ் கூறியிருந்தார். ஆனால், அந்த ஆச்சர்யமான வேட்பாளர், தற்போது சிறையில் இருக்கிறார்.
விசித்திரமான வழக்கு
நடிகர் ஒருவர் காங்கிரசுக்கு ஆதரவாக, அதிகம் பிரசாரம் செய்தார். அவரை கட்சியில் சேர்த்து, தேர்தலில் களமிறக்க, சிவகுமார் சகோதரர்கள் திட்டமிட்டனர். அந்த நபர் யார் என்பதை, நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள்.
நடிகர் தர்ஷன் மீதான குற்றச்சாட்டை, ஊடகங்களில் கவனித்தேன். இது ஒரு விசித்ரமான வழக்கு என, தோன்றுகிறது. அரசியலுக்கு வர வேண்டும் என, அவருக்கு ஆசை இருந்திருக்கலாம்.
ஆனால், அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. ராம்நகரின் நான்கு தொகுதிகளில், சென்னபட்டணாவில் பா.ஜ.,வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
கனகபுரா, ராம்நகர், மாகடியில் ம.ஜ.த.,வுக்கு சக்தி உள்ளது. மேலிட தலைவர்கள், யாருக்கு சீட் கொடுக்கின்றனர் என்பதை பார்க்கலாம். இரண்டு கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

