பல்லாரி சிறையில் நடிகர் தர்ஷன் அடைப்பு குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
பல்லாரி சிறையில் நடிகர் தர்ஷன் அடைப்பு குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி
ADDED : ஆக 30, 2024 06:23 AM

பல்லாரி: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சொகுசு வசதிகள் கிடைத்ததால், நடிகர் தர்ஷன் நேற்று பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது கூட்டாளிகளும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர். தர்ஷனை பார்க்க வந்த ரசிகர்களை, தடியடி நடத்தி, போலீசார் விரட்டினர்.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தர்ஷன், பவித்ரா உட்பட 13 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சிறையில், மற்ற கைதிகளை விட, தர்ஷனுக்கு சொகுசு வசதிகளுடன், ராஜ உபசாரம் நடந்தது. அவருக்கு கட்டில், மெத்தை, வெளியில் இருந்து பிரியாணி என ஏகப்பட்ட வசதிகள் கிடைத்தன.
சிறையில் ஜாலி
இதற்கிடையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக இருக்கும் ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, சித்தாபுரா குல்லா சீனா ஆகியோருடன் தர்ஷன், சிகரெட் மற்றும் கப்பில் காபி குடித்தபடி ஜாலியாக சிரித்தபடி இருந்த படம் சமீபத்தில் வெளியானது.
மேலும், மற்றொரு ரவுடியுடன் மொபைல் போனில் வீடியோ கால் பேசும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை கைதிக்கு இந்த அளவுக்கு, சிறையில் வி.ஐ.பி., வசதிகள் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
பத்து பேர்
இந்நிலையில், தர்ஷன் மற்றும் அவரது ஒன்பது கூட்டாளிகளை மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு, நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றனர். பகல் பொழுதில் அழைத்து சென்றால், ரசிகர்கள் இடையூறு செய்யும் வாய்ப்பு இருந்தது.
எனவே, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து, நேற்று அதிகாலை 4:30 மணி அளவில், 10 பேரும் வெவ்வேறு வாகனங்களில், மாநிலத்தின் வெவ்வேறு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆரம்பத்தில் தர்ஷனை, பொலிரோ ஜீப்பில் அழைத்து சென்றனர். அந்த வாகனத்தின் முன் பகுதியில், இரண்டு பாதுகாப்பு வாகனங்களும்; பின் பகுதியில் இரண்டு பாதுகாப்பு வாகனங்களும் சென்றன. மற்ற கைதிகள் வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த காட்சிகள், 'டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. இது மீண்டும் பிரச்னை ஏற்படுத்தும் என்று கருதிய போலீசார், எலஹங்கா அருகில், ஜீப்பில் இருந்த தர்ஷனை இறக்கி, டெம்போ டிராவலர்ஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
அவரது முகம் வெளியில் தெரியாதபடி, துணியால் வாகனம் மூடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், நெலமங்களா, சென்னகிரி, சித்ரதுர்கா, ஹாவேரி, கலபுரகி வாயிலாக பல்லாரிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திடீரென ரூட்டை மாற்றிய போலீசார், தேவனஹள்ளி, சிக்கபல்லாப்பூர், பாகேபள்ளி, ஆந்திராவின் ஹிந்துப்பூர், அனந்தபூர் மார்க்கமாக மீண்டும் ராய்ச்சூர் வந்து, பல்லாரியை காலை 9:53 மணிக்கு அடைந்தனர். பலத்த பாதுகாப்புடன், அங்குள்ள சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார்.
உடல்நிலை
சிறை முன்பு அவரது ரசிகர்கள் நின்றிருந்தனர். போலீசார் எவ்வளவு சொல்லியும் அவர்கள் செல்லவில்லை. பின், லேசான தடியடி நடத்தி, அவர்களை விரட்டி அடித்தனர். அப்போதும், 'எங்கள் டி பாஸ் அவர் தான், அவர் என்ன செய்தாலும், உற்சாக வரவேற்பு அளிப்போம்' என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்று, மற்ற கைதிகளான நாகராஜ், கலபுரகிக்கும்; ஜெகதீஷ், லட்சுமண் ஆகியோர் ஷிவமொகாவுக்கும்; தன்ராஜ் தார்வாடுக்கும்; வினய் விஜயபுராவுக்கும்; பிரதோஷ் பெலகாவி சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மைசூரு சிறைக்கு செல்ல வேண்டிய பவன், ராகவேந்திரா, நந்தீஷ் ஆகியோர் பரபரப்பன அக்ரஹாரா சிறையிலேயே இருந்தனர். எந்த நேரத்திலும் மைசூருக்கு அழைத்துசெல்லப்படுவர்.
பல்லாரி மாவட்ட சிறை, மாநிலத்திலேயே மிகவும் உச்சகட்ட பாதுகாப்பு கொண்டது. இதற்கு முன் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டிருந்த, 15 அறைகள் கொண்ட பிரிவில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். இது, 10 சதுர அடி அகலம், 10 சதுர அடி நீளம் கொண்ட அறை. இதன் வெளியே, இரண்டு காவலர்கள், ஒரு உதவி எஸ்.ஐ., நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில், 300க்கும் அதிகமான கைதிகள் இருந்தாலும், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது. தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள பிரிவுக்கு செல்ல, மூன்று நுழைவு வாயில்களை கடக்க வேண்டும். இங்கு, ஏற்கனவே ஹாசன், பெங்களூரு, ஷிவமொகா, மங்களூரை சேர்ந்த 15 கைதிகள் வெவ்வேறு அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கு நடிகர் சக்ரவர்த்தி, நடிகை பூஜா காந்தி நடித்த ஊதாஹி படம், இதே இடத்தில் தான் படப்பிடிப்பு நடந்தது. தர்ஷனின் சவுகாதா படம், பல்லாரி சிறை மாதிரி செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது அதே சிறையில் அவர் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் குமார், எஸ்.பி., ஷோபா ராணி, சிறைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர்.
தர்ஷன் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி சிறைக்குள் செல்லும் போது, விலை உயர்ந்த பிராண்டட் டி ஷர்ட், அதில் தொங்கிய கூலிங் கிளாஸ், கையில் வெள்ளி காப்பு, மினரல் குடிநீர் பாட்டில் உடன் ஸ்டைலாக சென்றார்.
இந்த விஷயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அவற்றை கழற்றி வைக்கும்படி போலீசார் உத்தரவிட்டனர். இதை பார்த்த சிறைத்துறை வடக்கு மண்டல டி.ஐ.ஜி., சேஷா, 'அழைத்து வரும்போது, ஏன் கவனிக்கவில்லை' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்திக்கு கடிதம் எழுதினார்.
தர்ஷன் சிறைக்கு வந்ததும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறை பதிவேட்டில், பெயர், பெற்றோர், முகவரி, எந்த வழக்கு போன்றவற்றை தன் கைப்பட எழுதினார். பின், விசாரணை கைதி எண் 511 வழங்கி, பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறை அறையில் அடைக்கப்பட்டார். நண்பகல் 12:00 மணியளவில், சப்பாத்தி, சாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட மறுத்து விட்டார். பழங்கள் வழங்கும்படி கேட்டுள்ளார்.