ADDED : ஜூன் 14, 2024 07:39 AM

பெங்களூரு: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, நடிகர் துனியா விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கன்னட திரையுலகில், வில்லனாக அறிமுகமாகி, நாயகனாக உயர்ந்தவர் நடிகர் துனியா விஜய். இவரது நடிப்பில் திரைக்கு வந்த துனியா சூப்பர் ஹிட்டாகி, திருப்புமுனையாக அமைந்தது.
ரசிகர்கள் இவரை, 'துனியா' விஜய் என்ற அடைமொழி வைத்து, அழைக்க துவங்கினர்.
இவருக்கு நாகரத்னா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு, நடிகை கீர்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டதால், தம்பதி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
கீர்த்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து, போலீஸ் நிலையத்தில் நாகரத்னா புகார் அளித்திருந்தார்.
மனைவி தனக்கு பல விதங்களில் மன வலியை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டிய துனியா விஜய், விவாகரத்து கோரி பெங்களூரு, சாந்திநகரின் குடும்ப நல நீதிமன்றத்தில், 2018ல் மனு தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணை நடந்த போது, மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை.
எனவே, துனியா விஜய் விவாகரத்து கேட்டு, தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.