21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் துவாரகீஷ் உடல் தகனம்
21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நடிகர் துவாரகீஷ் உடல் தகனம்
ADDED : ஏப் 18, 2024 04:30 AM

பெங்களூரு :  மறைந்த பிரபல நடிகர் துவாரகீஷ் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கன்னடம், தமிழ், ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து, இயக்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் துவாரகீஷ், 81. தன் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.
வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீட்டில் நேற்று முன்தினம் துவாரகீஷ் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று காலை அவரது உடல், ரவீந்திரா கலாஷேத்திராவில் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் சித்தராமையா, கன்னட வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் தங்கடகி, நடிகர்கள் முக்கிய மந்த்ரி சந்துரு, ராகவேந்திரா ராஜ்குமார்.
சுதீப், யஷ், ஜக்கேஷ், ரவிச்சந்திரன், அனிருத், ரமேஷ் அரவிந்த், குமார் கோவிந்த், ஸ்ரீமுரளி; நடிகையர் சுமலதா, மாளவிகா அவினாஷ், சுதாராணி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இசையமைப்பாளர் மனோகர், இயக்குனர் மஞ்சு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின், அங்கிருந்து சாம்ராஜ்பேட்டில் உள்ள டி.ஆர்.மில் ஹிந்து மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.
பின், மின் மயானத்தில், பிராமண முறைப்படி துவாரகீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. மூத்த மகன் யோகேஷ் இறுதி சடங்கு செய்தார். உடன் மனைவி, மற்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

