போதை வழக்கில் நடிகையர் ராகினி, சஞ்சனாவுக்கு சிக்கல்
போதை வழக்கில் நடிகையர் ராகினி, சஞ்சனாவுக்கு சிக்கல்
ADDED : மார் 12, 2025 11:43 PM

பெங்களூரு : போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மீதான வழக்கை ரத்து செய்த, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று சி.சி.பி., போலீசார் மேல்முறையீடு செய்தனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், கன்னட திரையுலக முன்னணி நடிகையர் ராகினி திவேதி, 34, சஞ்சனா கல்ராணி, 35, ஆகியோரை, 2020ல் சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
மூன்று மாத சிறைவாசத்திற்கு பின் சஞ்சனாவும் ஐந்து மாத சிறைவாசத்திற்கு பின் ராகினியும் வெளியே வந்தனர். இரு நடிகையர் கைது செய்யப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரும் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தான கவுடர், சஞ்சனா மீது பதிவான வழக்கை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்தார்.
ராகினி மீதான வழக்கும், இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி ரத்து செய்யப்பட்டது. வழக்கில் இருந்து தப்பியதால், இரு நடிகையரும் நிம்மதியாக இருந்தனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமென, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கடந்த மாதம் கூறி இருந்தார்.
சி.சி.பி., போலீசாரும், மேல்முறையீடு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராகிணி, சஞ்சனா ஆகிய இருவரையும் போதைப் பொருள் வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.சி.பி., போலீசார் நேற்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது நடிகையர் இருவருக்கும் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.