அதானி விவகாரம்; செபி தலைவர் மாதவி அக்., 24ல் ஆஜராக சம்மன்
அதானி விவகாரம்; செபி தலைவர் மாதவி அக்., 24ல் ஆஜராக சம்மன்
UPDATED : அக் 05, 2024 11:10 AM
ADDED : அக் 05, 2024 09:09 AM

புதுடில்லி: அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில், அக்.,24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராகுமாறு பார்லிமென்ட் பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.
'அதானி' குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.
ஆனால், இவையனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார். மாதவி புரி புச், விதிகளை மீறி, 2017 - 2022 ஆண்டுகளுக்கு இடையில் தன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக, புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டு
அதுமட்டுமன்றி, அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதவி பங்குகளை வைத்திருப்பதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் மாதவி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தது.
சம்மன்
இது தொடர்பாக, விளக்கம் அளிக்க, அக்.,24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராகுமாறு பார்லிமென்ட் பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதானி குழுமம் குறித்து, ஹிண்டன் பர்க் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய போது பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, செபி தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால், மீண்டும் பிரச்னை தலைதூக்கி உள்ளது.