பிரவீன் நெட்டார் கொலையில் கூடுதல் குற்றப்பத்திரிகை
பிரவீன் நெட்டார் கொலையில் கூடுதல் குற்றப்பத்திரிகை
ADDED : ஆக 03, 2024 11:15 PM

பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி உறுப்பினர் பிரவீன் நெட்டார் கொலையில், மேலும் இரண்டு பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார், 27. தட்சிண கன்னடா பா.ஜ., இளைஞர் அணி உறுப்பினராக இருந்தார். 2022 ஜூலை 27ம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.
பெல்லாரே போலீசார் விசாரித்தனர். பின்னர் வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். கொலை வழக்கில் முக்கிய நபரான முஸ்தபா பைச்சார் என்பவர், தலைமறைவாக இருந்தார்.
கடந்த மே 10ம் தேதி, ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூரில் முஸ்தபா கைது செய்யப்பட்டார். இவருக்கு ரியாஸ் என்பவர் அடைக்கலம் கொடுத்தது தெரிந்தது. அவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடினர்.
ஜூன் 3ம் தேதி மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு, விமானத்தில் தப்ப முயன்ற ரியாசை என்.ஐ.ஏ., கைது செய்தது.
முஸ்தபா பைச்சார், ரியாஸ் மீது பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
'பி.எப்.ஐ., சேவை அமைப்பின் முதன்மை பயிற்சியாளராக முஸ்தபா பைச்சார் இருந்தார் என்றும், கொலை வழக்கில் இன்னும் ஏழு பேரை கைது செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.