ADDED : செப் 18, 2024 01:14 AM

டில்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விலகியதை அடுத்து, புதிய முதல்வராக, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஆதிஷி மர்லினா சிங், 43, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும், முதல்வராக இருந்தவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முதல்வர் பதவியில் தொடர முடியாத நெருக்கடியான சூழல் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய கெஜ்ரிவால் முடிவெடுத்தார்.
இந்நிலையில், நேற்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் கெஜ்ரிவால் எழுந்து, மூத்த அமைச்சரான ஆதிஷி பெயரை முதல்வராக முன்மொழிவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆதிஷியை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்தனர். இதை தொடர்ந்து, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை, அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். , -- நமது டில்லி நிருபர் -