ADDED : ஜூலை 06, 2024 06:22 AM

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதாகி உள்ள, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ஜாமின் மனு மீதான விசாரணையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் பதிவான முதல் பலாத்கார வழக்கில் ஜாமின் கேட்டு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், பிரஜ்வல் மனு செய்தார்.
ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் நேற்று விசாரித்தார்.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அசோக் நாயக், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரஜ்வல் தரப்பில் ஆஜரான வக்கீல், 'எனது மனுதாரரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்திய பின் தான், சிறையில் அடைத்தனர்.
ஆனால் தற்போது விசாரணை என்ற பெயரில் அவரை சிறையிலிருந்து அடிக்கடி வெளியே அழைத்து வந்து துன்புறுத்துகின்றனர். விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
இதற்கிடையில் பிரஜ்வலுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அந்தப் பரிசோதனை அறிக்கையில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, பிரஜ்வல் எச்.ஐ.வி., சோதனை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. வழக்கில், இதையும் ஒரு ஆதாரமாக சேர்க்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.