ADDED : ஆக 07, 2024 02:28 AM
பகர்கஞ்ச்,:பயிற்சி மையத்தில் தீ விபத்து தொடர்பான வழக்கின் விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு டில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பல மாணவர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு விசாரித்து வந்தது. தீத்தடுப்பு விதிகளை அனைத்து பயிற்சி மையங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அல்லது அவற்றை மூட வேண்டும். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க டில்லி மாநகராட்சிக்கும் டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கும் உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பழைய ராஜேந்தர் நகரில் கடந்த ஜூலை 27ல் ஏற்பட்ட விபத்தில் மூன்று பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதை உயர் நீதிமன் ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.
இதையடுத்து பயிற்சி மையங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணையில் மேலும் சில உத்தரவுகள் பிறப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.