ADDED : ஜூலை 07, 2024 03:18 AM

பெங்களூரு: 'டீ துாளிலும் செயற்கை நிறம் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு கமிஷனர் சீனிவாஸ் கூறியதாவது:
கோபி மஞ்சூரியன், சாலை ஓரம் உணவு, பானிபூரியை போன்று, டீ துாளிலும் செயற்கை நிறம், ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. ருசியை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், மிகவும் அபாயமானது. செயற்கை நிறம், ரசாயனம் மட்டுமின்றி மரத்துாளும் கலப்பதை கண்டறிந்துள்ளோம்.
பெங்களூரின் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டீ துாள் மட்டுமின்றி, சமீப நாட்களில் இனிப்புப் பண்டங்கள், பேக்கரி தின்பண்டங்களில், சுவையை அதிகரிக்கும் நோக்கில் கெமிக்கல், செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய டீ துாள், ரசாயனங்களை தடை செய்வது குறித்து ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.