ADDED : செப் 15, 2024 06:09 AM

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் குறித்து, தலைமை செயலர் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், பல்வேறு துறை செயலர்கள், காவல் துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தலைமை செயலர் வழங்கிய அறிவுரைகள்:
சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கலெக்டர்கள், மண்டல அளவில் பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதில், ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும்.
குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்
சென்னை வடி நிலப் பகுதிகளில் நடந்து வரும், பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும், அக்., 15க்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்
அனைத்து முதல்நிலை மீட்பாளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அவர்களை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள், பருவமழை துவங்கும் முன்னரே, பாதிப்புக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்
பருவ மழை துவங்கும் முன்பே, மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனைத்து வானிலை வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில், பகுதி வாரியான வானிலை தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.