ADDED : ஜூலை 06, 2024 12:56 AM

திருச்சூர், கேரளாவில், பண்ணை ஒன்றில் வேகமாக பரவக்கூடிய ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், மடக்கத்தரா பஞ்சாயத்தில் உள்ள வெளியந்தரா கிராமத்தில், பாபு என்பவர் பன்றி பண்ணை வைத்துள்ளார்.
இங்குள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் வகைகளிலேயே மிகவும் கொடிய வகையான இந்த தொற்று, பன்றிகளுக்கு மத்தியில் வேகமாக பரவக்கூடியது.
இதை தொடர்ந்து, பாபுவின் பண்ணையில் உள்ள 310 பன்றிகளை கொன்று, பாதுகாப்பாக புதைக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
பண்ணையை சுற்றியுள்ள, 1 கி.மீ., பகுதி நோய் பாதிப்பு பகுதியாகவும், 10 கி.மீ., சுற்றுப்பகுதி நோய் கண்காணிப்பு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பன்றி இறைச்சியை எடுத்து செல்லவும், பண்ணைகளின் செயல்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தீவனங்களை எடுத்து செல்லவும், பிற பகுதிகளில் இருந்து எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில், பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்ட பன்றிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; மாவட்டம் முழுதும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் என்பது பன்றிகளுக்கு இடையே வேகமாக பரவக்கூடியது. பிற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவக்கூடிய சாத்தியம் மிக குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.