10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்தது காங்.,- எம்.பி.,க்கள் எண்ணிக்கை
10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்தது காங்.,- எம்.பி.,க்கள் எண்ணிக்கை
ADDED : ஜூன் 05, 2024 02:31 AM

புதுடில்லி: இரண்டு லோக்சபா தேர்தல்களுக்கு பின், காங்கிரஸ் கட்சி தன் எம்.பி.,க்களின் எண்ணிக்கையை இந்த முறை உயர்த்தி உள்ளது.
கடந்த, 2009 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 206 இடங்களில் வென்றது.
அதே நேரத்தில், 2014ல் மோடி அலையில், ராகுல் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், ஆட்சியை இழந்ததுடன், மிகவும் குறைவாக, 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் வென்றதை விட, 162 இடங்களை இழந்ததுடன், அதற்கு கிடைத்த ஓட்டும், 9.3 சதவீதமாகக் குறைந்தது.
மேற்கே குஜராத், ராஜஸ்தானில் இருந்து கிழக்கில் உள்ள பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மத்திய பிரதேசம் ஆகியவை, ஹிந்தி பேசும் மாநிலங்கள் என்ற, 'ஹிந்தி பெல்ட்' என்ற புதிய பிராந்தியம் உருவானது. அந்த தேர்தலில், இந்த மாநிலங்களில் பா.ஜ., அள்ளியது. அதனால் தான், தனிப்பட்ட முறையில், 282 தொகுதிகளிலும், கூட்டணியாக, 336 இடங்களிலும் வெல்ல முடிந்தது.
அந்தத் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, உத்தர பிரதேசத்தில் 73, மஹாராஷ்டிராவில் 41, பீஹாரில், 31, மத்திய பிரதேசத்தில், 27 இடங்களில் வென்றது.
இதைத் தவிர, குஜராத்தில் உள்ள 26, ராஜஸ்தானில் உள்ள 25, டில்லியில் உள்ள ஏழு, ஹிமாச்சலில் உள்ள நான்கு, உத்தரகண்டில் உள்ள ஐந்து என, அந்த மாநிலங்களில் அனைத்து இடங்களையும், பா.ஜ., கூட்டணி கைப்பற்றியது. ஜார்க்கண்டில் உள்ள 14ல் 12, சத்தீஸ்கரில் உள்ள 11ல் 10, ஹரியானாவின் 10ல் ஏழு இடங்களையும் பிடித்தது.
உத்தர பிரதேசத்தில், தங்களுடைய குடும்ப தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலியில் மட்டும் காங்கிரஸ் வென்றது. அந்தப் பிராந்தியத்தில், மேலும் ஆறு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள், மேலும் ஆறு இடங்களைக் கைப்பற்றின.
அதற்கு, ஐந்து ஆண்டுகள் கழித்து, 2019 தேர்தலில், மீண்டும் ராகுல் தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக, 52 இடங்களை மட்டுமே காங்., வென்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ., தனிப்பட்ட முறையில், 303 மற்றும் கூட்டணிகளுடன் இணைந்து, 353 இடங்களை வென்றது.
அந்தத் தேர்தலிலும் ஹிந்தி பிராந்தியத்தில் பா.ஜ., அபார வெற்றியைப் பெற்றது. உத்தர பிரதேசத்தில் 74, பீஹாரில் 39, மத்திய பிரதேசத்தில் 28ல் வென்றது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், டில்லியில் உள்ள 77 இடங்களையும் அள்ளியது. சத்தீஸ்கரில் ஒன்பது, ஜார்க்கண்டில் 11 என, ஹிந்தி பேசும் மாநிலங்களில், 238 இடங்களை பா.ஜ., வென்றது.
ஆனால் காங்கிரஸ் ஆறு இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஏழு இடங்களில் வென்றன. காங்கிரசுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக, அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார்.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். கடந்த இரண்டு லோக்சபாவில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை.
கடந்தாண்டு ஜூனில் உருவாக்கப்பட்ட 'இண்டியா' கூட்டணியால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ், 99 இடங்களில் வென்றுள்ளது. இதன் வாயிலாக, 10 ஆண்டுகளுக்குப் பின், தன் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அது உயர்த்தி உள்ளது. இந்தத் தேர்தலில், ஹிந்தி பெல்டில், குறிப்பாக உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிக இடங்கள் கிடைத்ததே, காங்கிரசின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய காரணமாகும்