கொலை வழக்கில் ஆயுள் தண்டனை; 41 ஆண்டுக்கு பிறகு ரத்து செய்தது ஐகோர்ட்!
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை; 41 ஆண்டுக்கு பிறகு ரத்து செய்தது ஐகோர்ட்!
UPDATED : செப் 04, 2024 12:32 PM
ADDED : செப் 04, 2024 09:59 AM

பிரயாக்ராஜ்: சாட்சியத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி, 41 ஆண்டுக்கு பிறகு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை திரும்ப பெற்றுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தால் அது முடிவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. அதிலும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் தண்டனை காலமே முடிந்துவிடும். அந்த அளவிற்கு தாமதம் ஆகும் நிலையில், ஒரு கொலை வழக்கில் விசாரணை முடிந்து ஆயுள் தண்டனை வழங்கி 41 ஆண்டுக்கு பிறகு அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிமன்றம் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,ன்படி முன்னாள் ராணுவ வீரரான முராரி லால் என்பவர் தனது துப்பாக்கியால் பூல் சிங் என்பவரை சுட்டுக்கொன்றார். அதன்படி, முராரி லால்-ஐ போலீசார் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கு 1983ம் ஆண்டு மே 3ல் பதுன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முராரி லால், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை மீண்டும் விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களிடையே முரண்பாடுகளான வாக்குமூலங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்தனர்.
அதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொலையை பார்த்த சாட்சிய நபர் உள்பட, சாட்சியம் அளித்தவர்களின் வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பது அப்பட்டமாக இருப்பதாக கூறி, முராரி லால்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை திரும்ப பெற்றனர்.

