குறைந்தபட்ச ஆதார விலை - விவசாயிகளின் உரிமை என்கிறார் ராகுல்
குறைந்தபட்ச ஆதார விலை - விவசாயிகளின் உரிமை என்கிறார் ராகுல்
UPDATED : ஜூலை 24, 2024 04:43 PM
ADDED : ஜூலை 24, 2024 11:04 AM

புதுடில்லி: குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக லோக்சபாவில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, பார்லிமென்ட் வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். பிறகு, ராகுல் வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பது விவசாயிகளின் உரிமை எனக்கூறியுள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய போராட்டங்கள் நடத்த போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள் அறிவித்து உள்ளனர். மேலும், லோக்சபாவில், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பேரணி நடத்தப்படும் என அறிவித்த விவசாயிகள், ஆக.,15 அன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பார்லிமென்ட் வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பேச விவசாய சங்கத்தினர் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் பார்லி., வளாகம் வந்தனர். ஆனால், மத்திய அரசு அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார்.
இதன் பிறகு தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உ.பி., தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட12 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், பார்லி வளாகத்தில் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, காங்., கட்சியின் கே.சி.வேணுகோபால், தீபெந்தர் சிங் ஹூடா, எம்.பி.,க்கள் அமரீந்தர் சிங் வாரிங் மற்றும் சுக்ஜிந்தர் சிங் ரன்தவா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் அதனை சட்டப்பூர்வ ரீதியில் உறுதி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி லோக்சபாவில் தனி நபர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என விவசாய சங்கத்தினர் ராகுலிடம் வலியுறுத்தினர்.
உறுதி செய்வோம்
இது தொடர்பாக ராகுல் ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது விவசாயிகளின் உரிமை. அவர்கள் இதனை பெறுவதை இண்டியா கூட்டணி உறுதி செய்யும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.