ADDED : ஏப் 22, 2024 01:30 AM
புதுடில்லி : 'நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தாலே இனி நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு எழுதலாம். மேலும் பிஎச்.டி., படிப்பில் சேரலாம்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு எழுதுவதற்கும், பிஎச்.டி., எனும் ஆராய்ச்சி படிப்பில் சேரவும், 55 சதவீத மதிப்பெண் உடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என விதி இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது:
நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் நேரடியாக நெட் தேர்வு எழுதலாம் மற்றும் பிஎச்.டி., படிப்பில் சேரலாம். எந்த துறையில் இளநிலை படிப்பை முடித்திருந்தாலும், விரும்பும் துறையில் பிஎச்.டி.,ஆய்வு படிப்பை மேற்கொள்ளலாம்.
இதற்கு 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, இதில் 5 சதவீத தளர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

