பிரஜ்வல் வீடியோ வெளியானதில் சிவகுமாருக்கு தொடர்பு பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடா பரபரப்பு குற்றச்சாட்டு
பிரஜ்வல் வீடியோ வெளியானதில் சிவகுமாருக்கு தொடர்பு பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடா பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : மே 07, 2024 05:33 AM

பெங்களூரு : எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, வக்கீல் தேவராஜ்கவுடா கூறி உள்ளார்.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும், வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டதாக சொல்லப்பட்டது.
ஹாசன் ஹொளேநரசிபுரா பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜ்கவுடாவிடம், வீடியோ, புகைப்படங்கள் இருந்த பென்டிரைவை கொடுத்ததாக, கார்த்திக் கூறி இருந்தார். இதனால் தேவராஜ்கவுடா மீது சந்தேகம் எழுந்தது.
அமைச்சர் பதவி
இந்நிலையில் பெங்களூரில் தேவராஜ்கவுடா நேற்று அளித்த பேட்டி:
ஆபாச வீடியோ வழக்கில், எம்.பி., பிரஜ்வல் சிக்கி உள்ளார். அடுத்து யாரை சிக்க வைக்கலாம் என்று, முயற்சி நடந்து வருகிறது. பிரஜ்வலின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு உள்ளது. என்னிடம் எஸ்.ஐ.டி., பெண் அதிகாரி ஒருவர் விசாரித்தார். அவரிடம் சிவகுமார் பற்றி சில தகவல்கள் கூறினேன்.
நான் கூறியதை பதிவு செய்து கொண்டனர். அதில் சில திருத்தங்கள் செய்து, எனக்கு அனுப்பினர். சிவகுமார் பற்றி கூறியதை வாபஸ் பெறும்படி, என்னிடம் கேட்டனர். பிரஜ்வல் வழக்கில் சிவகுமார் பெயரை பயன்படுத்தாமல் இருந்தால், லோக்சபா தேர்தல் முடிந்ததும், எனக்கு அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவி தருவதாக கூறினர். பா.ஜ.,வில் உள்ள முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, சிவகுமாருக்காக என்னிடம் பேச்சு நடத்தினார்.
மானநஷ்ட வழக்கு
இந்த வழக்கின் முக்கிய புள்ளி டிரைவர் கார்த்திக் தான். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில், விசாரணை குழு ஈடுபடவில்லை.
பிரஜ்வல் 400 பெண்களை கற்பழித்ததாக, தேர்தல் பிரசாரத்தில் ராகுல் கூறுகிறார். பிரஜ்வல் வழக்கை வைத்து, மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதனால் பிரஜ்வல் வழக்கில், பிரதமர் மோடியின் பெயரை இழுக்கின்றனர்.
என்னிடம் கார்த்திக் கொடுத்த பென் டிரைவில் நான்கு வீடியோக்கள், 2,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தன. ஆனால் இப்போது தினமும் ஒரு வீடியோ வெளியாகிறது. நிறைய வீடியோக்களை, காங்கிரசார் உருவாக்கி உள்ளனர். என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை. நீதிமன்றத்திற்கு சென்று விளக்கம் அளிப்பேன்.
சிறப்பு புலனாய்வு குழுவால் நிம்மதியாக விசாரணை நடத்த முடியவில்லை. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் போன் செய்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு ஒப்படைக்க வேண்டும்.
இதுகுறித்து கவர்னர், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவேன். சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கா விட்டால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகசிய வாக்குமூலம்
இதற்கிடையில் வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட ரேவண்ணாவிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று காலை விசாரணை நடத்தினர். உங்களுக்கும், வேலைக்கார பெண்ணை அழைத்து சென்ற, சதீஷ் பாபுவுக்கு எப்படி பழக்கம் என்று கேட்டனர்.
'எனக்கும், கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பெண் யார் என்றே, எனக்கு தெரியாது.பெண்ணின் மகன் புகாரில் ரேவண்ணா என்ற பெயரை குறிப்பிட்டு உள்ளார். ரேவண்ணா என்ற பெயரில் நான் மட்டும் தான் இருக்கிறேனா' என்றும், ரேவண்ணா கூறி உள்ளார்.
பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு தெரியாது என்று பதில் அளித்து உள்ளார். பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, சதீஷ் பாபு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை நேற்று எட்டு நாள் காவலில், சிறப்பு புலனாய்வு குழு எடுத்து உள்ளது.
இந்நிலையில் ரேவண்ணா, பிரஜ்வல் மீது ஹொளேநரசிபுரா போலீசில் பாலியல் புகார் அளித்த பெண், நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அப்போது, பெங்களூரு பசவனகுடியில் உள்ள வீட்டில் வைத்து, பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து நேற்று மதியம் 1:00 மணிக்கு அந்த பெண்ணை, பசவனகுடியில் உள்ள வீட்டிற்கு, சிறப்பு குழுவினர் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது ரேவண்ணா தரப்பு வக்கீலை, வீட்டிற்கு அனுமதிக்கவில்லை. இதற்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
பதில் வரவில்லை
இதற்கிடையில் பிரஜ்வலை கைது செய்வது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனுடன், முதல்வர் சித்தராமையா நேற்று காலை ஆலோசனை நடத்தினார். பிரஜ்வல் நடவடிக்கையை கண்காணிக்க, இன்டர்போலுக்கு புளு கார்னர் நோட்டீஸ் அனுப்புவது குறித்து, சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அலோக் மோகன், முதல்வரிடம் விளக்கம் அளித்து உள்ளார்.
பிரஜ்வல் ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது துபாயில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் இருந்து அவர் எந்த நேரத்திலும் வரலாம் என்ற தகவலின் அடிப்படையில், பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்களில், சிறப்பு புலனாய்வு குழுவினர், கடந்த இரண்டு நாட்களாக காத்து உள்ளனர். ஆனால் பிரஜ்வல் வருவது பற்றி, உறுதியான தகவல் இல்லை.