ADDED : மார் 23, 2024 12:58 AM
புதுடில்லி தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர், 2ஜி முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு ஏற்றது.
மத்தியில், 2006 - 11 வரையிலான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, தனியார் மொபைல் போன் நிறுவனங்களுக்கான 2ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது.
வழக்குப்பதிவு
இதில், மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக, ராஜா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின் இவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், ராஜா, கனிமொழி உட்பட இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரை, சிறப்பு நீதிமன்றம் விடுவித்து 2017 டிச., 21ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர், 2018 மார்ச் மாதம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இதுவரை ஏழு நீதிபதிகள் விசாரித்தனர். எட்டாவதாக, நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன், இந்த மனு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 14ம் தேதி, மனு மீதான தீர்ப்பை நீதிபதி சர்மா ஒத்தி வைத்தார்.
அனுமதி
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி தினேஷ் குமார் சர்மா உத்தரவிட்டதாவது:
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த பின், வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.
எனவே, இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. விசாரணை மே மாதம் துவங்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

