குருகிராம் மேம்பாலம் மீண்டும் சேதம் ஒரு தடத்தில் போக்குவரத்துக்கு தடை
குருகிராம் மேம்பாலம் மீண்டும் சேதம் ஒரு தடத்தில் போக்குவரத்துக்கு தடை
ADDED : மே 30, 2024 02:04 AM
குருகிராம்:புதுடில்லி அருகே, குருகிராம் ஹீரோ ஹோண்டா சவுக் மேம்பாலம் அடைந்துள்ளதால் அதன் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
குருகிராம் ஹீரோ ஹோண்டா சவுக் மேம்பாலத்தில் 20 மீட்டர் தூரத்துக்கு சேதம் அடைந்துள்ளது. விபத்து ஏற்படாமல் தடுக்க அந்த இடத்தில் ஆணையத்தின் 6 ஊழியர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சேதம் ஏற்பட்டது குறித்து விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப 3 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று இரவு மேம்பாலத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது என போக்குவரத்துப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, டில்லி - -ஜெய்ப்பூர் வழித்தடத்தில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. பாலத்தின் மற்ற மூன்று தடங்களில் போக்குவரத்து சீராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த மேம்பாலம் 2014ம் துவங்கி 2017ல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தப் பாலத்தில் ஜெய்ப்பூர் - டில்லி பகுதியில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் சேதம் ஏற்பட்டது. கடந்த 2021ல், மேம்பாலத்தின் மேல் பகுதி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.
கடந்த ஆண்டு, போலீசார் , மேம்பாலம் கட்டுமானத்தில் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.