மீண்டும் 'டபுள் இன்ஜின்' ஆட்சி கோவா பா.ஜ., முதல்வர் கணிப்பு
மீண்டும் 'டபுள் இன்ஜின்' ஆட்சி கோவா பா.ஜ., முதல்வர் கணிப்பு
ADDED : ஏப் 04, 2024 11:02 PM

மாண்டியா: ''லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெறும். இதன் மூலம், கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமையும். 'டபுள் இன்ஜின்' ஆட்சியால் மட்டுமே வளர்ச்சி பணிகள் செய்ய முடியும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
கர்நாடகாவில், 2018ல் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., - காங்., கூட்டணி ஆட்சி அமைந்தது. இரண்டு கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால், அந்த ஆட்சி கவிழ்ந்தது. 2019ல் பா.ஜ., ஆட்சி அமைந்தது.
அப்போது, பா.ஜ., ஆட்சி அமைவதில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முக்கிய பங்கு ஆற்றியிருந்தார். தற்போது பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், மாண்டியாவில் பிரமோத் சாவந்த் நேற்று கூறியதாவது:
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடு முழுதும் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளது. ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.
பா.ஜ., வளர்ச்சி பணிகளை சொல்லி அரசியல் செய்கிறது. ஆனால், காங்கிரஸ் ஜாதி அடிப்படையில் அரசியல் செய்கிறது. கர்நாடகாவில் ஊழல் தாண்டவமாடுகிறது.
'அனைவருக்குமான ஆட்சி, அனைவருக்குமான வளர்ச்சி' என்பது பா.ஜ.,வின் கொள்கை. காங்கிரஸ், குறிப்பிட்ட சமுதாயங்களுக்கு மட்டுமே நல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. கோவாவில் 'டபுள் இன்ஜின்' ஆட்சியால், மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், வளர்ச்சி குன்றியுள்ளது.
இம்முறை மாண்டியாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கர்நாடகாவில், 28 தொகுதிகள் உட்பட நாடு முழுதும் 400 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.
இந்த வெற்றி மூலம், கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமையும். 'டபுள் இன்ஜின்' ஆட்சியால் மட்டுமே வளர்ச்சி பணிகள் செய்ய முடியும். இதை கர்நாடக மக்கள் நன்கு அறிந்தவர்கள். பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதற்கு மாநில வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
