ஏ.ஐ., பல்கலை, இலவச மின்சாரம் நவீன் பட்நாயக் தேர்தல் வாக்குறுதி
ஏ.ஐ., பல்கலை, இலவச மின்சாரம் நவீன் பட்நாயக் தேர்தல் வாக்குறுதி
ADDED : மே 11, 2024 12:51 AM
புவனேஸ்வர்,
ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுஉள்ளது. அதில், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுஉள்ளன.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, 147 சட்டசபை தொகுதிகளுக்கும், 21 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் துவங்கி, ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ஒடிசாவை பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக, நவீன் பட்நாயக் முதல்வராக இருக்கிறார்.
இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க அவர் முனைப்புடன் உள்ளார்.
இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வரானால், நாட்டிலேயே அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்கும் நபர் என்ற பெருமையை பெறுவார்.
இந்நிலையில், ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான, ஆளும் பிஜு ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்:
வரும் 2036க்குள், நாட்டின் நம்பர் - 1 மாநிலமாக ஒடிசா மாற்றப்படும்
ஒடிசாவின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், 'பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண்' ஆகிய விருதுகளுக்கு நிகராக, 'கலிங்க ஸ்ரீ, கலிங்க பூஷண்' ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்படும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும்
தொழில்முனைவோர் பல்கலை, ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு பல்கலை ஆகியவை நிறுவப்படும்
100 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம்; 100 - 150 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும்.