சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் திடீர் சந்திப்பு
சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் திடீர் சந்திப்பு
ADDED : செப் 12, 2024 02:44 AM

புதுடில்லி ;ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டத்துக்கு இடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சந்தித்தார். இன்று இருவரும் தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள 'பிரிக்ஸ்' அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மூன்று நாள் கூட்டம், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்கிறது.
இதில் பங்கேற்ற நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை நேற்று சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
மாநாட்டுக்கு இடையே இருவரும் இன்று தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளனர்.
இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை பிரச்னை மற்றும் எல்லையில் உள்ள படைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கூட்டம், ரஷ்யாவின் கஜானில் அடுத்த மாதம் 22 - 24ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இரு தரப்பும் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோது, பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமைதி பேச்சுக்கு தேவையான உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அமைதிப் பேச்சுக்கு இந்தியா மத்தியஸ்தம் செய்தால், அதற்கு தயாராக இருப்பதாக புடின் கூறியிருந்தார். இந்த நிலையில், அஜித் தோவல், ரஷ்யா சென்றுள்ளார். அமைதி பேச்சு தொடர்பாக, ரஷ்யாவுடன் அவர் பேசுவார் என்று தெரிகிறது.
பிரிக்ஸ் கூட்டத்தில் பேசுகையில், பயங்கரவாதம், சைபர் குற்றங்களை தடுப்பதில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, அஜித் தோவல் விளக்கினார்.