ADDED : ஏப் 10, 2024 02:15 AM

திருவனந்தபுரம் : ''லோக்சபா தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் என் மகன் அனில் அந்தோணி தோல்வி அடைய வேண்டும்,'' என, அவரது தந்தையும், முன்னாள் ராணுவ அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, 83, தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 26ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.
காங்., மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ., வில் இணைந்தார்.
இவர், வரும் லோக்சபா தேர்தலில், பத்தனம்திட்டா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இந்தத் தொகுதியில், காங்., சிட்டிங் எம்.பி.,யான ஆண்டோ அந்தோணி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று, செய்தியாளர்களிடம் ஏ.கே.அந்தோணி கூறியதாவது:
என்னை பொறுத்தவரை, குடும்பம் வேறு; அரசியல் வேறு. இந்த நிலைப்பாட்டை, என் துவக்க காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறேன். காங்கிரஸ் தான் என் மதம்.
பத்தனம்திட்டா லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் என் மகன் அனில் அந்தோணி, நிச்சயம் தோல்வி அடைய வேண்டும்.
அவரை எதிர்த்து போட்டியிடும், காங்., வேட்பாளர் ஆண்டோ அந்தோணி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அனில் அந்தோணி கூறுகையில், ''காங்கிரசின் காலாவதியான தலைவர்கள், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, அக்கட்சியின் எம்.பி., ஆண்டோ அந்தோணிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும், பத்தனம்திட்டாவில் என் வெற்றியை தடுக்க முடியாது,'' என்றார்.

