சிறுமி பலாத்கார விவகாரம் அகிலேஷ் கருத்தால் சர்ச்சை
சிறுமி பலாத்கார விவகாரம் அகிலேஷ் கருத்தால் சர்ச்சை
ADDED : ஆக 04, 2024 01:24 AM

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இரு மாதங்களுக்கு முன், 12 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த மொய்த் கான், ராஜு கான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
சமீபத்தில், சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் கர்ப்பமானது தெரிய வந்ததை அடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபமானது. இதையடுத்து, மொய்த் கான் மற்றும் ராஜு கானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மொய்த் கான் சமாஜ்வாதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், அயோத்தியில் மொய்த் கானுக்கு சொந்தமான பேக்கரியை, மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் வாயிலாக நேற்று இடித்து தள்ளினர்.
இதற்கிடையே, சமாஜ்வாதி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இது குறித்து கூறுகையில், ''கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மரபணு சோதனை நடத்தாமல், அவர்கள் தான் குற்றவாளிகள் என அறிவிப்பது, பாரபட்சமான நடவடிக்கை,'' என்றார். இதற்கு பகுஜன் சமாஜ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'ஓட்டு வங்கி அரசியலுக்காக குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதை, அகிலேஷ் யாதவ் நிறுத்த வேண்டும்' என்றனர்.