ADDED : ஆக 15, 2024 03:43 AM

பெங்களூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், தங்களின் வேலை பளு அதிகரிப்பால், வாரத்திற்கு ஒரு நாள் குடும்பத்தினருடன் எங்காவது, சுற்றுலா சென்று வர விரும்புவர்.
அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற இடமாக உள்ளது 'தொட்ட ஆலத மரா' என்ற இடம். அந்த இடத்தை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ளது கேட்டோஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 3 ஏக்கரில் ஏராளமான ஆலமரங்கள் உள்ளன.
இந்த இடத்தை 'தொட்ட ஆலத மரா' என்று, கிராம மக்கள் அழைக்கின்றனர். இங்கு 400 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட, ஆலமரங்கள் ஏராளமான உள்ளன.
கீச்...கீச்...
குடும்பத்தினருடன் இங்கு சுற்றுலா செல்வோர், ஆல மரங்களின் அடியில் அமர்ந்து இளைப்பாறலாம். மரங்களின் கிளைகளில் அமர்ந்து, பல்வேறு பறவைகள் கீச்... கீச் என்று சத்தம் போடுவதை கேட்பது, மனதிற்கு ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும். எவ்வளவு வெயில் அடித்தாலும், மரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும் போது, உஷ்ணம் தெரியாமல் குளுகுளுவென இருக்கும்.
நடந்து சென்றும், சைக்கிளை ஓட்டியபடியும் சென்று இயற்கையை பார்த்து ரசிக்கலாம். ஏராளமான குரங்குகளின் வசிப்பிடமாகவும், தொட்ட ஆலத மரா உள்ளது.
குரங்குகள் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு தாவி விளையாடுவது, குழந்தைகளை வெகுவாக கவரும்.
பஸ் வசதி
தொட்ட ஆலத மரா அருகே மாச்சினபெலே தடுப்பணை மற்றும் சவனதுர்கா மலையும் அமைந்து உள்ளது. அங்கும் சென்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம்.
மொத்தத்தில் ஒரு நாள் குடும்பத்தினருடன் பொழுதை போக்க, தொட்ட ஆலத மரா ஏற்ற இடமாக உள்ளது. நீங்களும் ஒரு நாள் உங்கள் குடும்பத்தினருடன் சென்று வரலாமே!
பெங்களூரு நகரில் இருந்து தொட்ட ஆலத மரா 17 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது.
மெஜஸ்டிக்கில் இருந்து கெங்கேரிக்கு பி.எம்.டி.சி., அல்லது மெட்ரோ ரயிலில் செல்லலாம்.
அங்கிருந்து இன்னொரு பி.எம்.டி.சி., பஸ்சில் தொட்ட ஆலத மராவை சென்றடைய வேண்டும்.
கே.ஆர்., மார்க்கெட்டில் இருந்து தொட்ட ஆலத மராவுக்கு நேரடி பஸ்கள் உள்ளன. காரில் சென்றாலும், கார்களை நிறுத்தும் வசதியும் உள்ளது.
- நமது நிருபர் -