ADDED : மே 28, 2024 09:49 AM

புதுடில்லி: டில்லியில் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க உள்ளார்.
ஜூன் 1ம் தேதி டில்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. அதில் பங்கேற்குமாறு தி.மு.க., உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை ஆலோசித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் முடிவு எடுக்க உள்ளனர். கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க உள்ளார். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வெளியே, இருந்து முழு ஆதரவு அளிப்பேன் என மம்தா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
புறக்கணிப்பது ஏன்?
இது குறித்து மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டில்லியில் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து முன்பே என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அன்று மேற்கு வங்கத்தில் சில தொகுதியில் தேர்தல் நடப்பதாலும், புயல் நிவாரணப் பணிகள் காரணமாகவும் என்னால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. எனது முன்னுரிமை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தான். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.