கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வர் சித்தராமையா, சிவக்குமார் பங்கேற்பு
கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வர் சித்தராமையா, சிவக்குமார் பங்கேற்பு
ADDED : ஜூலை 14, 2024 05:03 PM

பெங்களூரு: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவுப்படி, தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்வதற்காக, கர்நாடகாவில் இன்று (ஜூலை 14) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை வழங்க உத்தரவிடும்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தியது. இம்மாதம் இறுதி வரை, தினமும் 1 டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி, உத்தரவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடும் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் இன்று (ஜூலை 14) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
எதிர்ப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.